Friday, August 15, 2014

காராமணி பொரியல்


தேவையானவை: karamani
காராமணி -1 டம்ளர்
வெங்காயம் -2
காய்ந்த மிளகாய் -3
தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை -10 இலை
செய்முறை
காராமணியை முன்தினம் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும். காலையில் காராமணியை நன்கு கழுவிவிட்டு, குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
ஒரு விசில் வைத்து இறக்கிக் கொள்ளவும். காராமணி வெந்ததும் அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், மிளகாயையும் மிக்ஸியில் போட்டு லேசாகத் திரிதிரியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை அரைத்த வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் காராமணியையும் போட்டு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். உடலுக்கு மிகவும் நல்லது.
இந்தப் பொறியல் கேரளாவில் மிகப் பிரபலம். அவர்கள் தேங்காய் எண்ணெய் விட்டு காராமணி பொறியலை செய்வதால் ருசி அதிகமாக இருக்கும்.

பப்பாளி பஜ்ஜி




தேவையானவை:pappali
பப்பாளிக்காய் -1,
பஜ்ஜி மிக்ஸ்,
சமையல் எண்ணெய்,
சிறிது உப்பு,
பெருங்காயப் பொடி.
செய்முறை:
வாழைக்காய் போன்று பப்பாளிக் காயை சீவிக் கொள்ளவும்.
பஜ்ஜி மிக்ஸை தண்ணீர்விட்டு பிசைந்து கொள்ளவும்.
அதில் சிறிது பெருங்காயப் பொடியையும் தேவையான உப்பைக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும். பிறகு பப்பாளித் துண்டுகளை பஜ்ஜி மிக்ஸில் நனைத்து எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
பப்பாளியை பழமாக மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைப்பவர்கள், இந்த பஜ்ஜிக்குப் பிறகு பஜ்ஜிக்காகவும் பப்பாளியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
வெள்ளரிக்காயின் தோல்லை சீவி எறும்பு புற்றின் அருகில் வைத்தால் போதும், எறும்புகள் காணாமல் போய்விடும்.
ஆடையில் ஒட்டியுள்ள சுவிங்கம்மை எடுக்க ஆடையை குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீஸரில் ஒருமணி நேரம் வைத்துப் பின் துவைக்க வேண்டும்.
வென்னீரில் அரை எலுமிச்சம்பழத்தை வெட்டிப் போட்டு அதில் ஊற வைத்துத் துவைத்தால் வெள்ளைத் துணிகள் பளிச்சிடும்.
எலுமிச்சம்பழத்தில் இருந்து அதிக ஜூஸைப் பெற பழத்தை ஒருமணி நேரம் வென்னீநீரில் போட்டு பின் பிழியவும்.
முட்டைக்கோஸில் உள்ள வாசனை போக அதனை வேகவைக்கும்போது சிறிது பிரட் துண்டை அதில் போட்டுவிட்டால் போதும்.

விதவிதமாக சமைக்கலாம் ருசிக்கலாம்



ரவா உருண்டை, பயத்தம் உருண்டை, கடலைமாவு உருண்டை தயாரிக்கும்போது சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு குளுக்கோஸ், பால்பவுடர், ராகிமால்ட், பாதாம் மிக்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.
தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காயுடன் ஊறவைத்த நிலக்கடலையும் சேர்த்து அரைத்துச் செய்தால் பர்பி அதிக சுவையுடன் இருக்கும்.
குலோப் ஜாமூன் மிக்ஸுடன் சர்க்கரை பொடி கலந்து பிசைந்து சற்று தடிமனான சப்பாத்திகளாகத் திரட்டி, சிறிய டைமண்ட் வடிவில் வெட்டி நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுத்தால், மாலை நேர சிற்றுண்டி தயார்.
ஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டால், அதிக சுவையுடன் இரும்புச்சத்தும் அதிகரிக்கும்.
அவசரப் பாயசம் தயாரிக்க இரண்டு முந்திரிப் பருப்பு, கொஞ்சம் கசகசாவை அம்மியில் அரைத்துக் கடலைமாவில் சேர்த்து கொதிக்கவிடவும். சாதத்தையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்துப் பால் சேர்த்தால் பாயசம் ரெடி.
பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர்விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
மைசூர்பாகு செய்வதற்கு எல்லாரும் கடலைமாவை மட்டும்தான் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் கடலை மாவில் கலந்து மைசூர்பாகு தயாரித்தால், வாயில் போட்டால் உடனே கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கும்.

அவசரத்துக்குக் கைகொடுக்கும் சமையல்


• அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மினகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால் மாலை நேரத்துக்கு ஏற்ற கார சிற்றுண்டி தயார்.
• அவலை நனைத்து அதில் தேங்காய் பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.
• அவலை நொறுக்கி தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.
• அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து  வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.
• கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு சில நிமிடம் வேக வைத்து அதில் தேங்காய்த் துருவல் சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.
• பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.
• கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..